சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு மே மாதம் 21 ஆம் திகதி இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கொண்டாட்ட விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெருந்தோட்ட அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன அவர்கள் கலந்து கொண்டார்கள்.
FAO இன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி QU Dongyu அவர்களின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது, மேலும் அனைத்து தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் முதன்மையாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது மற்றும் அவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான சாத்தியக்கூறுகளும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக்க அவர்களுக்கு உதவுவதற்கான இயலுமைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, இலங்கையில் தேயிலை உற்பத்தியில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் பங்களிப்பு பற்றியும், அவர்களின் பொருளாதாரத்தை இஸ்திரப்படுத்துவது தொடர்பிலும், தேயிலைத் தொழிலில் பெறுமதியான பங்கை வகிக்கும் தோட்டத் தொழிலாளர் சமூகத்தையும், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையின் முன்னேற்றம் தொடர்பிலும் எவ்வாறு பாடுபடுவது என அமைச்சர் மாநாட்டில் உரையாற்றினார்.
இந்நிகழ்வுடன் இணைந்ததாக, ஐக்கிய நாடுகள் சபையின் மகளிர் மன்றத்துடன் (UNWG) இணைந்து FAO தலைமையகத்தில் Atrium இன் தேயிலை தொழிற்துறையை அடிப்படையாகக் கொண்ட கண்காட்சியொன்று நடத்தப்பட்டதுடன், தேநீர் சுவைக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியை ஏற்பாடு செய்ததன் நோக்கம், சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரத்தில் இத்துறை வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் SDGs களை அடைவதில் அதன் பங்களிப்பைப் பற்றியும் பார்வையாளர்களுக்கு விழிப்பூட்டுவதாகும்.
தேயிலையின் ஆழமான கலாச்சாரப் பாரம்பரியத்தை நல்வாழ்வின் புராதன சின்னமாக இந்த கொண்டாட்டம் காட்சிப்படுத்தியதோடு, அதனுடன் UNWG இனை தொடர்புபடுத்துவதன் மூலம் தேயிலையின் மதிப்புச் சங்கிலியில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் தேயிலைக் கலாச்சாரத்தின் ஊடாக உலகமயமாக்கம் பெற்ற சமூகங்களில் ஒரு பேச்சுப்பொருளை ஏற்படுத்துவதும் இந்த நிகழ்வில் இடம்பெற்றது.