தேசிய தேயிலை உற்பத்தியை அதிகரித்து 2 பில்லியன் டொலர் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து ஆரம்பிக்கும் நேரடி தேயிலை செடி பயிர்ச் செய்கைத் திட்டத்தின் துவக்க விழா அண்மையில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன அவர்களின் தலைமையில் காலி அல்பிட்டியவில் இடம்பெற்றது. இந்த விழாவுடன் இணைந்ததாக, தேயிலைப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் 6 மாவட்டங்களுக்கு இந்த நேரடி தேயிலை செடி செய்கைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இங்கு உரையாற்றிய அமைச்சர், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தேசிய ஏற்றுமதி வருமானத்தில் பெருந்தோட்டத்துறை அதிக பங்களிப்பை வழங்கியதாக குறிப்பிட்டார். அதன்போது தேங்காய் ஏற்றுமதி மூலம் 890 மில்லியன் டொலர்களும், இறப்பரில் இருந்து 1 பில்லியன் டொலர்களும், இலவங்கப்பட்டையிலிருந்து 420 மில்லியன் டொலர்களும், தேயிலையிலிருந்து 1.23 பில்லியன் டொலர்களும் தேசிய ஏற்றுமதி வருமானத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் தேயிலை ஏற்றுமதி மூலம் 2 பில்லியன் டொலர்களை ஈட்டுவது தமது அமைச்சின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது எனவும், அதனை அடையும் நோக்கில் இந்த நேரடி தேயிலைத் தோட்டத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இலங்கையில் சுமார் 4 இலட்சம் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இருப்பதாகவும், அவர்களுக்கு எதிர்காலத்தில் தேயிலைப் பயிர்ச்செய்கைக்கான மானியங்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் எதிர்காலத்தில் உரங்களின் விலைகள் தொடர்ந்தும் குறைப்பதற்கு இயலுமை நிலவுவதாகவும் அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்தார்.