அண்ணளவாக 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இறப்பர் கைத்தொழில் துறையானது, மூன்றாவது பெரிய ஏற்றுமதி வருவாய் ஈட்டும் கைத்தொழில் துறையாக நாட்டின் ஏற்றுமதி வருவாயில் 8.33% பங்களிப்புச் செய்வதுடன், 2024 ஆம் ஆண்டில் 1,001.54 மில்லியன் டொலர் வருமானத்தையும் ஈட்டியுள்ளது.

2017-2025 காலப்பகுதிக்கான 'இறப்பர் பாரிய திட்டம்' அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது, தற்போது அது அமுல்படுத்தப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம், புதிய விதிமுறைகள் (EUDR), இறப்பர் பயிர்ச்செய்கையில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட இறப்பர் பயிர்ச்செய்கை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் விநியோக வலையமைப்பில் உள்ள பலவீனங்கள் காரணமாக, விவசாயிகள் தங்கள் உற்பத்திகளுக்கு குறைந்த விலையைப் பெறுவதன் காரணமாக, சிறிய இறப்பர் பயிர்செய் உரிமையாளர்கள் இறப்பர் பயிர்ச்செய்கையிலிருந்து விலகுவதால் புதிய திட்டத்தின் தேவை எழுந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு தொடக்கம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இறப்பர் கைத்தொழில் துறையின் எதிர்காலத்தைத் திட்டமிடும் நோக்கத்துடன் "இறப்பர் அமைப்பு வரைபடமாக்கல் திட்டம் தயாரித்தல் " 2025 அக்டோபர் 28 ஆம் திகதி தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தில் நடைபெற்றது.

இதற்காக, அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை தொடர்புபடுத்தி, முழு இறப்பர் கைத்தொழில் துறையுடன் தொடர்புடைய அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய இறப்பர் அமைப்பு வரைபடமாக்கல் திட்டம் தயாரிப்பதற்கான முதலாவது செயலமர்வு, ஓய்வுபெற்ற அரச சேவை உத்தியோகத்தரும், அமைச்சின் செயலாளரும், இறப்பர் துறை நிபுணருமான சந்திரசேன மாலியத்த அவர்களின் வள பங்களிப்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம். இலங்கை இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம், வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சு, தேசிய திட்டமிடல் திணைக்களம், தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனம், ஏற்றுமதி அபிவிருத்தி சபை, கைத்தொழில் அபிவிருத்தி சபை, இலங்கை சுங்கம், இலங்கை முதலீட்டு சபை, இலங்கை இறப்பர் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களின் சங்கம், கொழும்பு இறப்பர் வர்த்தகர்கள் சங்கம், பெருந்தோட்ட உரிமையாளர்களின் சங்கம், தொழில்நுட்ப ரீதியாக நிபுணத்துவம் பெற்ற இறப்பர் உற்பத்தியாளர்களின் சங்கம், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான இறப்பர் உற்பத்திப் பொருட்களின் உற்பத்தியாளர்கள் சங்கம், சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இறப்பர் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரச, நியதிச் சபைகள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த செயலமர்வில் பங்கேற்றன.