2021 ஆம் ஆண்டில் பெருந்தோட்டத் துறையுடன் தொடர்புடைய பயிர்களின் ஏற்றுமதி வருமானம் 3.8 டொலர் மில்லியனாகும். தேயிலை ஏற்றுமதியினால் 1.3 டொலர் மில்லியன் ஈட்டப்பட்டுள்ளது.

தரமான தேயிலைக் கொழுந்துகளைப் பறித்தல் மற்றும் உற்பத்தி செயல்முறைகள் குறித்து தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை விழிப்பூட்டும் நாடளாவிய வேலைத்திட்டத் தொடரின் ஆரம்ப சந்திப்பு  பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் கெளரவ வைத்தியர் ரமேஷ் பதிரண அவர்களின் தலைமையின் கீழ் 2022.08.31 ஆந் திகதி பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை தேயிலை சபை, தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தது.
"இந்நாட்டின் தேயிலை தொழில்துறை அண்மைக்கால வரலாற்றில் முகங்கொடுத்துள்ள பாரிய நெருக்கடியாக உரம் தொடர்பான பிரச்சினையை சுட்டிக்காட்ட முடியும் என்பதோடு, அதற்கேற்ப சிலோன் தேயிலையின் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய பங்கம் குறித்து நாம் தெளிவாக புரிந்துகொண்டுள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் அப்பிரச்சினையை முகாமை செய்து தேயிலை செய்கையுடன் தொடர்புடைய தொழிலினை பலம்பொருந்தியதாக நடாத்திச் செல்ல முடியும் எனவும் இங்கு கருத்துத் தெரிவித்து கௌரவ அமைச்சர் உரையாற்றினார்.

தேயிலைக் கொழுந்துகளின் அறுவடை குறைந்துள்ளதைப் போன்றே நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை நாம் உற்பத்தி செய்யும் தேயிலையில் காணப்படும்  தரத்தின் நிலையும் பாரிய அளவில் குறைந்துள்ளதால், அந்நிலைமைகளை வெற்றி கொள்ள நாம்  கடந்த இரண்டு ஆண்டுகளில் பல திட்டங்களை செயல்படுத்தியிருந்தோம், ஆனால் அவை பல்வேறு சவால்களை எதிர்கொண்டன, எனவே தரமிக்க உயர்ரக செடிகளுக்கு மதிப்பினை வழங்குதல்,  முறையான உரம் வழங்கல், தாவரப் பராமரிப்பு, மண்ணரிப்பைத் தடுத்தல் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகியவற்றில் நாம் அதிக கவனம் செலுத்துவதுடன், முறையாக தேயிலைக் கொழுந்துகளை பறித்தல் மற்றும் போக்குவரத்தும் தேயிலையின் தரத்தை மேம்படுத்த உதவும் என கௌரவ அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர், உள்ளிட்ட அந்தந்த நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் மற்றும் அந்தந்த நிறுவனங்களின் பிராந்திய மட்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.